சிவசேனா மூத்த தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மும்பை, ஜூலை. 31 – 1,034 கோடி ரூபாய் நிலமோசடி தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை முன் சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில், இந்த வழக்கில் ஜூலை 20-ம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நில மோசடி வழக்கில் சிவசேனா (உத்தவ் தாக்கரே ஆதரவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.