சிவராஜ்குமாரின் படங்களுக்கு தடை விதிக்க பாஜக வலியுறுத்தல்

பெங்களூரு, மார்ச் 25- மக்களவைத் தேர்தல் நிறைவடையும் வரை கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் படங்கள் திரையிடுவதற்கு திரையரங்கம், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்ளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவர் ராகுல் கவுட்டில்யா தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளார். அதில், ‘’கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சிவராஜ்குமார் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். இதுமட்டுமல்லாமல் வேறு சில தொகுதிகளிலும் சிவராஜ்குமார் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவராஜ்குமார் பிரபலமான நடிகராக இருப்பதால் வாக்காளர்களிடம் கூடுதலாக ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால் வேட்பாளர்களிடையே சமநிலையை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே மக்களவைத் தேர்தல் நிறைவடையும் வரை சிவராஜ்குமார் நடித்த திரைப்படங்களை திரையரங்கு, தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’’என கோரியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவராஜ்குமார் தன் மைத்துனர் மது பங்காரப்பாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.