சிவலிங்கம் தொடர்பான வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்தது நீதிமன்றம்

வாரணாசி, நவ. 15- உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இந்த வழக்கில் கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது உள்ளே சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து விஷ்வ வேதிக் சனாதன் சங்கம் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும், மசூதிக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும், அந்த வளாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என கோரப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த வழக்கை நீதிபதி மகேந்திர பாண்டே விசாரித்து வருகிறார். கடந்த அக். 27-ம் தேதி இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நவம்பர் 8-ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், 8-ம் தேதி நீதிபதி விடுப்பில் இருந்ததால் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 17-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், கடந்த 1991ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடு) சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது.