சிவலிங்க தரிசனத்துக்கு அனுமதி கோரிய மனு: இன்று தீர்ப்பு

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகவும் அதனை அன்றாடம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும் என்று கோரியுள்ள மனு மீது வாரணாசி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப், அங்கு மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடுத்திருந்தனர். அதற்கிடையில் மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள சுகானாவின் நடுவில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்துப் பெண்கள் ஐவரும் கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினர். மசூதிக்குள் இந்துக் கடவுளரின் மேலும் பல சிலைகள் இருப்பதாகவும் கூறினார்கள். இந்நிலையில், இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் தடை செய்துள்ளது. அத்துடன், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகவும் அதனை அன்றாடம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும் என்று கோரியுள்ள மற்றொரு மனு மீது வாரணாசி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அது மட்டுமல்லாது, சுயம்பு ஜோதிர்லிங்க விஸ்வேஷ்வரை பூஜிக்க உடனடி அனுமதி, இந்துக்களிடன் கியான்வாபி மசூதி வளாகத்தை முழுமையாக ஒப்படைத்தல், வளாகத்திற்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதித்தல் ஆகிய மனுக்களை விசாரித்து தீர்பு வழங்குகிறது.