சீனாவின் கடன் வலையில் சிக்கி தவிக்கும் நாடுகள்.. அதிக கடன் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா?

சீனா, மே 6- பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடுகள் மற்றும் வறுமையில் இருக்கும் நாடுகளுக்கு தானாக முன்வந்து உதவி செய்து அவர்களை தன்னுடைய கடன்காரர்களாக மாற்றும் வழிமுறையை சீனா காலம் காலமாக பின்பற்றி வருகிறது. வெளிநாடுகளுக்கு சீனா வழங்கியுள்ள கடன்களில் 44 % ஆப்ரிக்க நாடுகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளது .அதேபோல 2012 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளுக்கு சீனா வழங்கிய கடனின் மதிப்பு 6.4 மில்லியன் டாலராக இருந்து 2022 ஆம் ஆண்டில் 42.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளத. இதில் மூன்றில் இரண்டு பகுதி கடன் தொகை பாகிஸ்தானிற்கே சென்று இருப்பது தெரியவந்துள்ளது. சீனா மூன்று குறிக்கோள்களின் அடிப்படையில் தான் கடன்களை வழங்குகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், கனிம வளங்கள் அதிகம் நிறைந்திருக்கும் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள். அதேபோல சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் வரக்கூடிய நாடுகள் ஆகியவற்றுக்கு தான் அதிக அளவில் கடனை வழங்கியுள்ளது. யாகூ ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி,பாகிஸ்தான் சீனாவிற்கு கிட்டத்தட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கிறது. சாலை மற்றும் எரிசக்தி திட்டங்கள், துறைமுகத் திட்டங்களுக்கு சீனா பெரிய அளவு கடன் வழங்கியுள்ளது. அங்கோலா நாடு சீனாவிற்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை திரும்ப வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எண்ணெய் மற்றும் வைரம் வளங்கள் நிறைந்த இந்த நாடு உள்கட்டமைப்பு பணிகளான சாலை, ரயில்வே மற்றும் வீட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு சீனாவிடம் பெரிய அளவிலான தொகையை கடனாக வாங்கியுள்ளது. இலங்கை சீனாவிடம் கிட்டத்தட்ட 74,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கிறது. இலங்கையும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமான பணிகளுக்காக சீனாவிடம் இந்த கடனை வாங்கி இருக்கிறது. எத்தியோப்பியா சீனாவிடம் 56,000 கோடி கடனை வாங்கி இருக்கிறது. குறிப்பாக தகவல் தொடர்பு துறை மற்றும் தொழில் மேம்பாட்டுக்காக இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் கென்யா சீனாவிடம் 55,000 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. இந்த நாடும் உற்பத்தி மற்றும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த கடனை பெற்றிருக்கிறது.