‘சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும்’

பாலி, நவ.15- சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், சீன அதிபர், அமெரிக்க அதிபர் சந்திப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மைக்காலமாக சீனா மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.