சீனாவுடனான வர்த்தகம் அதிகரிப்பு: கெஜ்ரி கண்டனம்

புதுடெல்லி : ஜனவரி. 26 – டெல்லியில் சாத்ரசல் மைதானத்தில் குடியரசு தின கொண்டாட்டம் நடந்தது. அதில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர் பேசியபோது, மத்திய அரசையும், கவர்னர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:- சமீபகாலமாக மாநில அரசுகள் துன்புறுத்தப்படுகின்றன. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களும், துணைநிலை ஆளுனர்களும் மாநில அரசுகளின் பணிகளை தடுக்கிறார்கள். உதாரணமாக, டெல்லி அரசு எத்தனையோ மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் அவற்றில் கவர்னர் கையெழுத்திட மறுக்கிறார். மக்களின் தீர்ப்பை ஒரே ஒரு நபர் தடுத்து நிறுத்த முடியுமா? ஒரு மனிதர், தன் கையில் லகானை வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை பிணைக்கைதியாக வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.
சமீப ஆண்டுகளாக இன்னொரு வினோதமான சூழ்நிலையும் காணப்படுகிறது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டசபையை கூட்ட விரும்புகிறது. ஆனால், கவர்னரோ அதற்கான கோப்பில் கையெழுத்திட மறுக்கிறார். தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதை கேள்வி கேட்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவரா? மாநில அரசுகள், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கின்றன. ஆனால், கவர்னர்கள் அதை நிராகரிக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை சமீபகாலமாக கண்டு வருகிறோம். ஜனநாயகத்தை இருள் சூழ்ந்துள்ளது. இத்தகைய இந்தியாவையா நாம் காண விரும்பினோம்? இதற்காகவா நமது சுதந்திர போராட்ட வீரர்கள் உயிரை கொடுத்தனர்? நாம் 74-வது குடியரசு தினம் கொண்டாடும் நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். கவர்னர்களிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவது பற்றி நினைக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் உச்சபட்சமானவை. யாரும் அதற்கு மேற்பட்டவர்கள் அல்ல.
அதுபோல், மத்திய அரசு அண்மைக்காலமாக நீதித்துறையுடன் மோதி வருகிறது. நீதிபதிகளுடன் மோத வேண்டிய அவசியம் என்ன? மாநில அரசுகள், மாணவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் என அனைவருடனும் மோதி வருகிறார்கள். நாம் இணைந்து செயல்பட்டால், இந்தியா உலகத்தின் முதன்மை நாடாக உருவெடுப்பதை யாரும் தடுக்க முடியாது. எல்லை பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் கவலை ஏற்படுத்தி உள்ளது. சீன ஆக்கிரமிப்பை மீறி, அந்நாட்டுடனான இந்திய வர்த்தகத்தை நாம் அதிகரித்துள்ளோம். வர்த்தகம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இது சரியல்ல. சீனாவில் இருந்து செருப்புகள், சிலைகள், மெத்தைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வருகிறோம். அவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யலாம். அது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். சீனாவுக்கும் வலிமையான அறிகுறியை தெரிவிக்கும். இந்தியாவிலேயே டெல்லியில்தான் பணவீக்கம் குறைவாக உள்ளது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளது. உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.