சீனியர் ஜடேஜாவுக்காக இறங்கி வந்த ரச்சின் ரவீந்திரா

சென்னை, மார்ச் 21-சிஎஸ்கே அணியில் ஜெர்சி நம்பரான 8ஐ ஜடேஜா பயன்படுத்தி வருவதால், இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவின் புதிய ஜெர்சி எண்ணுடன் களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார் ரச்சின் ரவீந்திரா. உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய ரச்சின் ரவீந்திரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் என்பதால், ஐபிஎல் தொடரில் இவரை யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பெரிய விலைக்கு ஐபிஎல் அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் ரூ.1.8 கோடிக்கு ரச்சின் ரவீந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ரச்சின் ரவீந்திராவுக்கு சிஎஸ்கே பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே இடதுகை பெரு விரலில் காயத்தில் சிக்கினார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், அவரால் மே மாதத்தில் தான் சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியும் என்ற நிலை உருவாகியது. இதன் காரணமாக கான்வேவுக்கு பதிலாக சிஎஸ்கே அணி நிர்வாகம் ரச்சின் ரவீந்திராவை களமிறக்கும் திட்டத்தில் உள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளிலும் ரச்சின் ரவீந்திரா முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட புதிய வீரர்களின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ரச்சின் ரவீந்திரா, அவினாஷ் ஆரவல்லி, சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், மிட்சல் மற்றும் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ரச்சின் ரவீந்திரா 17வது எண் கொண்ட ஜெர்சி நம்பருடன் ரச்சின் ரவீந்திரா போஸ் கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ரச்சின் ரவீந்திராவின் ஜெர்சி எண் 8ஆக உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியில் ஜெர்சி எண் 8ஐ ஜடேஜா பயன்படுத்தி வருவதால், ரவீந்திரா ஜெர்சி எண் 17ஐ எடுத்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இதனால் சீனியருக்காக ஜூனியர் வீரரான ரச்சின் ரவீந்திரா விட்டுக் கொடுத்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.