சீரடிக்கு சென்ற பஸ் விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: ஜன. 13-
மராட்டிய மாநிலம் நாசிக் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஷீரடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாசிக்-சீரடி நெடுஞ்சாலையில் பாத்ரே என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளதாக நாசிக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிக பயணிகளுடன் வந்த தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்த வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷிர்டியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் ஷீரடி – நாசிக் தேசிய நெடுஞசாலையில் இந்த விபத்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் நடந்துள்ளது. இந்த பஸ்ஸில் மொத்தம் 45 பயணியர் பயணித்து வந்துள்ளனர். லாரி மற்றும் தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் விளைவாய் அதே இடத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்த பலரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இறந்தவர்களில் 7 பேர் ஆண்கள் மற்றும் மூன்று பேர் பெண்களாவர். மகாராஷ்டிராவின் அம்பரநாத் என்ற இடத்திலிருந்து ஷீரடி சாய் பாபா தரிசனத்திற்கென இவர்கள் சென்றுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் வாசிகள் மற்றும் ஷீரடி போக்குவரத்து போலீசாரால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.