சுகாதாரத் துறை விளக்கம்

புதுடெல்லி: டிசம்பர் 25 இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் முதல் கரோனா அலை உச்சத்தில் இருந்தது. கடந்த 2021 ஏப்ரலில் 2-வது கரோனா அலை உச்சத்தை தொட்டது. 2021 ஜனவரியில் தடுப்பூசி திட்டம்தொடங்கப்பட்டது. 2 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுமார் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் சுமார் 88 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கடந்த 2022 ஜனவரியில் 3-வது கரோனா அலை ஏற்பட்டபோது நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, 23 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில் புதிய கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:
இந்தியாவில் சுமார் 88 சதவீதமக்களுக்கு 2 தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணைநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கரோனா வைரஸால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.அதேநேரம், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம்.பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.