சுட்டெரிக்கும் வெயில்! மாணவர்களை பாதுகாக்க.. அரை நாள் மட்டுமே பள்ளி

ஹைதராபாத்:மார்ச் 8: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தெலங்கானா மாநிலத்தில் பள்ளிகள் அரை நாள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என தென் மாநிலங்களை வெயில் ஒரு கை பார்த்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் அதிக வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டுவிட்டன. எனவே 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்க, தெலங்கானா அரசு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி, மார்ச் மாதம் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி வரை அரை நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவித்திருக்கிறது. அதாவது காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அரை நாள் மட்டும் பள்ளிகள் செயல்பட்டாலும், மதிய உணவு வழக்கம்போல வழங்கப்படும் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கோடை வெயிலுக்கு முன்னதாக பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 21ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 4ம் தேதியும் முடிவடையும் வகையில் பள்ளிக்கல்வித்துறை தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது