‘சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த விரும்பாத அரசு’ – காங்.

புதுடெல்லி, மார்ச் 11- மத்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணு கோபால் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது ஒரே தேர்தல் ஆணையர்தான் உள்ளார். தேர்தல் ஆணையத்தில் என்னதான் நடக்கிறது. ஒட்டுமொத்த நாடும் கவலையில் உள்ளது. மக்களவைத் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த மத்திய அரசு விரும்பவில்லை. தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி சமீபத்தில் நீக்கப்பட்டார். தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சரை சேர்த்துள்ளனர். இதன் மூலம் இது இப்போது அரசு விவகாரமாகிவிட்டது. இதன்மூலம் இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.2019 தேர்தலின்போது, நடத்தை விதிமுறைகளை மீறியதாக பிரதமர் மோடி மீது புகார் எழுந்தது.
ஆனால் இதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அப்போது தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவசா இதில் உடன்படவில்லை. இதனால் அவர் இடைவிடாத விசாரணைகளை எதிர்கொண்டார். இந்நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியதன் மூலம், ஜனநாயக மரபுகளை அழிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதை உணர முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.