சுத்தம் செய்யும் பணி – திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து

திருப்பதி, செப்.12-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி இன்று காலை நடந்தது. பரிமளம் என்னும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் சன்னதி, கொடிமரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன. கோவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன
வரும் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் சமேதராக ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்கள் பழங்கள் கொண்டு அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவிலில் வெளிப்புறத்தில் வண்ண வண்ண மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 66,199 பேர் தரிசனம் செய்தனர். 29,351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.