சுப்மன் கில் இன்னும் கேப்டனாக முழுமை பெறவில்லை என்று விமர்சனம்

டெல்லி, அக். 15- இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவர் ஹவுஸ் ஆக சுப்மன் கில் விளங்குகிறார். டெஸ்ட் அணியின் கேப்டனாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள கில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். டி20 கிரிக்கெட்டின் துணை கேப்டனாக இருக்கின்றார். இந்த நிலையில் இங்கிலாந்து தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் கில், சமன் செய்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளார். பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் கில்லின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக பலரும் பாராட்டி உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப் இன்னும் கேப்டன் ஆக முழுமை பெறவில்லை என்று விமர்சித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இன்னும் கொஞ்ச நாளில் கில் சரியாகிவிடுவார். ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் கில்லுடன் பயணித்து அவருக்கு நிச்சயம் உதவி செய்வார்கள். கேப்டனாக இன்னும் கில் வளருவார். ஆனால் கில் இன்னும் முழுமை பெறவில்லை. அவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் வளர கொஞ்சம் நேரமும், வாய்ப்பும் கொடுங்கள். கில்லுக்கு ஒரு அணியை டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்துவதற்கான பொறுமை இருக்கின்றது. ஆனால் ஒரு கேப்டனாக யுக்திகளை வகுப்பதில் குறைந்தபட்சம் இரண்டு சீசன்களாவது கற்றுக் கொள்ள வேண்டும். நிச்சயம் அதை கோலி, ரோகித் கில்லுக்கு கற்றுக் கொடுப்பார்கள் என நான் நம்புகிறேன். விராட் கோலி, ரோகித் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் பங்கேற்பார்களா என்று எனக்கு தெரியாது. அது அவர்களுடைய சொந்த முடிவாக தான் இருக்கும். இல்லையென்றால் பி சி சி ஐ எடுக்க போகும் முடிவாக தான் இருக்கும். அவர்களுக்காக நான் யோசிக்க முடியாது. எனினும் இருவரின் திறன் மற்றும் உடல் தகுதி பார்ம் குறித்து தான் அது அமையும் என்று நினைக்கின்றேன். தற்போது வரை இருவரும் வெற்றிகரமாக தான் இருந்துள்ளனர் என்று இயன் பிஷப் கூறியுள்ளார்.