சுரங்கத்தில் சிக்கிய 40 தொழிலாளர்கள் கதி என்ன? மீட்பதில் தாமதம்

டேராடூன் / புதுடெல்லி: நவ. 18-உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் தொழிலாளர்கள் சிக்கி 120 மணி நேரத்துக்கும் மேல் ஆகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க 25 மீட்டர் தூரம் வரையில் மீட்பு குழுவினர் துளையிட்டுள்ளனர். இந்த நிலையில், 800 எம்எம் மற்றும் 900எம்எம் விட்டம் கொண்ட குழாய்களை ராட்சத துரப்பண இயந்திரத்தின் உதவியுடன் உட்செலுத்த 60 மீட்டர் வரை மீட்பு குழுவினர் துளையிட வேண்டியுள்ளது. அதன் மூலமாக சுரங்கத்தின் உள்ளே சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையை உருவாக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும்உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் அன்ஷு மணீஷ் கல்கோ கூறியதாவது: சுரங்கப் பகுதியில் உள்ளஉலோக பகுதியை வெட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால், துளையிடும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்தூரில் இருந்து மற்றொரு இயந்திரம் விமானத்தில் கொண்டுவரப்படுகிறது.
துளையிடுவதைக் காட்டிலும் இடிபாடுகள் வழியாக குழாய்களை உள்ளே தள்ளுவதில் அதிக நேரம் எடுக்கும். ஏனெனில் பயன்படுத்திய குழாய்களில் விரிசல் வராமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப், பிஆர்ஓ மற்றும் ஐடிபிபி உட்பட பல நிறுவனங்களைச் சேர்ந்த 165 பணியாளர்கள் 24 மணி நேரமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன், தாய்லாந்து, நார்வேயில் இருந்து வந்த மீட்புக் குழுக்களும் இணைந்துள்ளன.சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன், மருந்து, உணவு, தண்ணீர் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நம்பிக்கையூட்டும் வகையில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு கல்கோ தெரிவித்தார்.

இந்து புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றை இணைக்கும் சார்தாம் திட்டத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராத விதமாக சுரங்கம் இடிந்து விழுந்தததில் 40 தொழிலாளர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.