சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஏலகிரி: அக்..2- தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
ஏலகிரி மலை உயர்ந்த மலைப்பகுதியில் இயற்கை நிறைந்த சூழலில் நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு இதன் மத்தியில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே மாதிரியான குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த மலையில் அரசு சுற்றுலா தலங்களும், தனியார் சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன.
மேலும் இங்கு அரசு சார்பில் புதிய சுற்றுலா தலம் அமைக்க ஏழு ஏக்கரில் ₹3 கோடி மதிப்பீட்டில் சாகச விளையாட்டு தளம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 100 ஏக்கரில் பொட்டானிக்கல் கார்டன் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா,சாகச விளையாட்டு தளங்கள், பறவைகள் சரணாலயங்கள், ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சி, உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், வார இறுதி நாட்களான சனிக்கிழமை, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, இன்று திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரியில் திரண்டு வருகின்றனர்.
நேற்று படகு இல்லம், சிறுவர் பூங்கா இயற்கை பூங்கா, சாகச விளையாட்டு தளம், குடும்பத்தோடும் நண்பர்களோடும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையில் ஏலகிரி மலை பாதையில் 3வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என ஏலகிரி மலை போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.