சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக கைது வாரண்ட்- உ.பி அரசியலில் அடுத்த திருப்பம்

லக்னோ, ஜன. 13- உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சிக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவிகளை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மேலும் சில எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இருந்து வெளியேறினர். தன்னுடைய விலகல் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் மவுரியா தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் முக்கிய தலைவராக சுவாமி பிரசாத் மவுரியா இருந்து வருவதால், உத்தரப்பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை கைப்பற்றுவதற்கு மவுரியாவை பா.ஜ.க நம்பி இருந்த நிலையில், அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் அவரை கைது செய்ய சுல்தான்பூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. 2014-ம் ஆண்டு பகுஜான் சமாஜ் கட்சியில் இருந்தபோது அவர் இந்து கடவுள்கள் குறித்து தவறாக பேசியதாக கூறி அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று சமாஜ்வாதி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.