சுவாமி பிரசாத் மவுரியா காங்கிரஸில் இணைகிறார்

புதுடெல்லி, பிப் 17 உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா இரு தினங்களுக்கு முன் கட்சியை விட்டு விலகினார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தேசிய பொதுச் செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர், புத்த மதத்தை தழுவி அம்பேத்கர் பாதையை பின்பற்றுபவர். உ.பி.யில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மவுரியா சமூகத்து தலைவரான சுவாமி பிரசாத்திற்கு அதிக செல்வாக்கு உள்ளது. பிஎஸ்பியில் வசூலாகும் நிதி முதற்கொண்டு கட்சியில் யாருக்கு எந்தப் பதவி கிடைக்கும் என்பது வரை மவுரியா அறிந்திருந்தார். கடந்த 2016-ல் உபி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பிஎஸ்பியை விட்டு விலகிய மவுரியா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சமாஜ்வாதியிலும் மவுரியா செல்வாக்குடன் இருந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அவர்திடீரென சமாஜ்வாதி கட்சியிலிருந்தும் வெளியேறினார். அவர் பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில் உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் நியாய யாத்திரையில் வரும் 18-ம் தேதி அலகாபாத்தில் அவருடன் மவுரியா கலந்து கொள்கிறார். அதே நாளில்அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங் தொடங்கிய லோக் தளம் கட்சியின் இளைஞர் அணி மூலம் 1980-ல் அரசியல் பயணத்தை மவுரியா தொடங்கினார். பிறகு வி.பி.சிங்கின் ஜனதா தளத்திற்கு சென்றார். இவ்விரு கட்சிகளுக்கும் உ.பி.யில் சரிவு ஏற்பட்டதால் 1996-ல் பிஎஸ்பியில் இணைந்தார். இதன் மூலம் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு 4 முறை அமைச்சர் பதவியும் அளித்தார் மாயாவதி. பிஎஸ்பி ஆட்சி 2002 மற்றும் 2012 தேர்தல்களில் பறிபோனதால் கட்சி எம்எல்ஏக்கள் குழு தலைவர் மற்றும்எதிர்க்கட்சி தலைவர் பதவிகளையும் மாயாவதி அளித்திருந்தார். இதற்கு மவுரியா சமூகத்தின் முக்கியமுகமாக அவர் கட்சியில் இருந்தது காரணம் ஆகும். பல்லவி படேல்: அப்னா தளம் கட்சியின் கிருஷ்ணா படேல் பிரிவை சேர்ந்தவர் பல்லவி படேல். உ.பி.யின் சிராத்து தொகுதி எம்எல்ஏவான இவர் 2019 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இவர் தனது தாயார் கிருஷ்ணா படேலுக்கு சமாஜ்வாதி கட்சி மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவ்வாறுஅளிக்கப்படாததால் சமாஜ்வாதி கூட்டணியிலிருந்து வெளியேறி, காங்கிரஸுடன் அணி சேரவிருப்பதாக கூறப்படுகிறது.