சூடுபிடித்த கச்சத்தீவு விவகாரம்

ராமேசுவரம்: ஏப்ரல். 2 – மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்.19 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.டி.ஐ தகவல்களுடன் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘கச்சத்தீவை மீட்போம் என இன்று கூறிவரும் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?’’ என்றும், ‘‘10 ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலினும் பதில் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, பாஜக, திமுக, அதிமுக கட்சியினர் கச்சத்தீவு குறித்து சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்களிடம் கச்சத்தீவு குறித்த தங்கள் அனுபவங்கள், கருத்துகளைக் கேட்டறிந்தோம். அவர்கள் கூறியதாவது:
பிரின்சோ ரைமண்ட், ஓலைக்குடா மீனவ கிராமம், ராமேசுவரம்: ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த எங்கள் மூதாதையரான அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி என்பவரால் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் மீனவர்களின் பாதுகாவலரான புனித அந்தோணியாருக்கு ஓலைக்குடிசையில் ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த ஆலயத்துக்கு நாட்டுப் படகுகளில் செல்லும் மீனவ குடும்பங்கள், கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும் பெருமளவு மீன் கிடைக்கவும் அந்தோணியாரிடம் வேண்டிக் கொள்வோம்.
ஆண்டுக்கு ஒருமுறை கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு அந்தோணியார்ஆலயத்தில் ஒரு வார காலத்துக்கு திருவிழா நடைபெறும். இவ் விழாவில் பங்கேற்க, ராமேசுவரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்வேறு சமுதாய மக்களும், இலங்கையிலிருந்து தமிழ்மக்களும் படகுகளில் வருவார்கள்.
இந்த திருவிழாவில் இரு நாட்டுஉறவுகள் சந்தித்துக் கொள்வதுடன், அவர்களுக்குள் திருமணநிச்சயதார்த்தங்கள் கூட நடைபெறுவதுண்டு. இரு நாட்டினரும் பரிசுப்பொருட்களையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கச்சத்தீவு திருவிழா 2 நாட்கள்தான் நடைபெறுகின்றன. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.