சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

அபுதாபி, அக்.18-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் எளிதில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் திரிபாதி 23(16) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சுப்மன் கில் 36(37) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 29(20) ரன்களும், ஆண்ட்ரூ ரசூல் 9(11) ரன்களும், கேப்டன் மோர்கன் 34(23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் தினேஷ் கார்த்திக் 29(14) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் மற்றும் ரஷித் கான், பாசில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்துவங்கிய சன்ரைசரஸ் ஐதராபாத்துக்கு பேர்ஸ்டோ மற்றும் வில்லியம்சன் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர்.அடுத்து வந்து பிரியம் கார்க்(4) சோபிக்கவில்லை. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் கேப்டன் வார்னர் 3 வது விக்கெட்டுக்கு களமிறங்கினார்.அடுத்தடுத்து விக்கெட் விழ விஜய் சங்கர், மணிஷ் பாண்டே உள்பட யாரும் சரியாக ஆடாமல் பெவிலியன் திரும்பினர். சிறது நம்பிக்கை அளித்த அப்துல் சமாத் 15 பந்துகளில் 23ரன்கள் அடித்து அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும மறுமுனையில் கேப்டன் வார்னர் அதிராடியாக ஆடினார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ்க்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து அசத்திய வார்னர். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டும் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறையில் இரு அணிகளும் ஆடின.

முதலில் ஆடிய ஐதராபாத் அணி துவக்க ஆட்டக்காரராக இறங்கிய வார்னர் பெர்கூசன் வீசிய முதல் பந்திலேயே அவுட்டானார். 2 வது பந்தில் 2 ரன் அடித்த சமாத் மூன்றாவது பந்தில் போல்டானார். சூப்பர் ஓவர் விதிப்படி 2 விக்கெட்டுகள் விழுந்தால் ஆல் அவுட் கணக்காவதால் 3 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எளிதில் வெற்றி பெற்றது.வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் துவக்க ஆட்டக்காரர்களாக மார்கனும் தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கினர் களமிறங்கினர். முதல் பந்தில் ரன் அடிக்க முடியாமல் இரண்டாவது பந்தில் மார்கன் ஒரு ரன் அடிக்க 4 வது பந்தில் தினேஷ் கார்த்திக் 2ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.