சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 18 வரை காவல்

பெங்களூரு, ஜூலை 4- கர்நாடகாவில் முன்னாள் பிரதமர்தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது மஜதவை சேர்ந்த 2 இளைஞர்கள் தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஹொலெநர்சிப்புரா போலீஸார் அவரை கைது செய்தனர். பிரஜ்வல் ரேவண்ணா வழக்கைவிசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரே இவரிடமும் விசாரணைநடத்தினர். சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, 42-வது பெருநகர கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது போலீஸார் தரப்பில் மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜூலை 18-ம் தேதிவரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து சூரஜ் ரேவண்ணா பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதேசிறையில்தான் பிரஜ்வல் ரேவண்ணா, கொலை வழக்கில்கைதான நடிகர் தர்ஷன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.