சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்.2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1

பெங்களூரு, ஆக. 29- சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டர் கலன், இறங்கிய இடத்தில் இருந்தபடியும், அதில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ரோவர் வாகனம், ஊர்ந்து சென்றபடியும் நிலவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, சூரியன் குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சூரியன் – பூமி இடையே ‘லெக்ராஞ்சியன்’ எனப்படும் 5 சமநிலை புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது. இதன்படி லெக்ராஞ்சியன் புள்ளி 1 (எல்1)பகுதியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமும், ஐரோப்பிய விண்வெளி மையமும் இணைந்து கடந்த 1996 முதல் சூரியனை ஆய்வுசெய்து வருகின்றன. இதற்காக நாசாசார்பில் எல்-1 பகுதியில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியன் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 15 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதன் பலனாக இஸ்ரோ சார்பில் சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது எல்-1 பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.