சூரிய நமஸ்காரத்தில் கின்னஸ் சாதனைஅமித்ஷா பாராட்டு

புதுடெல்லி: ஜன. 2: சூரிய நமஸ்காரத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஒரே நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள 51 வெவ்வேறுஊர்களில், 108 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர்.அங்குள்ள புகழ்பெற்ற மோதேரா சூரியனார் கோயிலிலும் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வில், பல குடும்பங்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள், மூத்தகுடிமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் உற்சாகமாகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோர் பங்கேற்று ரசித் தனர்.
இதனிடையே ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா கூறியுள்ளதாவது: சூரிய நமஸ்காரம் என்பது அருமையான செயல்பாடு. நமது கலாச்சாரம் நமது பெருமை.
குஜராத்தில் உள்ள பெருமை வாய்ந்த பெண்களும் ஆண்களும் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தி 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இந்த நிகழ்வு ஒவ்வொரு நாளும்யோகா பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான உறுதிமொழிக்கு பீடமாக இருக் கட்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.