செங்கோட்டை மீது ஏறிய இளைஞர் கைது


புதுடெல்லி, பிப். 23-குடியரசு தினத்தன்று, டில்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, செங்கோட்டையின் கோபுரத்தின் மீது ஏறிய, 29 வயது இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது வெடித்த கலவரத்தின் போது, டில்லி செங்கோட்டைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர்களை தடுத்த போலீசாரை, பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
டில்லியைச் சேர்ந்த மனிந்தர் சிங், 30, போலீசாரை நோக்கி வாளை சுழற்றினார். இந்த காட்சி, அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இவரது கூட்டாளியான, ஜஸ்பிரீத் சிங், 29, செங்கோட்டை கோபுரத்தின் மீது ஏறிய காட்சிகளும், ஊடகங்களில் வெளியாகின.இந்நிலையில், மனிந்தர் சிங்கை, டில்லி போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். அவரது கூட்டாளியான ஜஸ்பிரீத் சிங், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்