
கரூர்: ஆக.3 -கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று (ஆக.2) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் வீடு மற்றும் அலுவலகம் பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து கரூரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீடு வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ளது. நேற்று மாலை வேடசந்தூர் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 பேர், சாமிநாதனின் வீட்டில் சோதனை செய்தனர். வேடசந்தூர் அருகே தமுத்துப்பட்டி கிராமம் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் 2 அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சாமிநாதன் சென்னையில் இருந்தார். வீட்டில் அவரது தாய் மட்டுமே இருந்தார். நேற்று மாலை தொடங்கி இரவு வரை சோதனை நீடித்தது.
மதுபானக் கூடங்கள் நடத்துவதற்கான அனுமதி வழங்க பணம் வசூலித்து தந்ததாக சாமிநாதன் மீது புகார் எழுந்த நிலையில், இந்த சோதனை நடந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கரூரில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையிலும் சோதானை: கரூரைத் தொடர்ந்து கோவையில் டாஸ்மாக் மேற்பாவையாளர் முத்துபாலன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. முத்துபாலன் நெல்லையைச் சேர்ந்தவராவார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கோவை ராமநாதபுரத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
கோவை ராமநாதபுரத்தைத் தொடர்ந்து கோவை ஹைவேஸ் காலனியில் உள்ள அருண் அசோசியேட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சார்ந்த இடங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.