
சென்னை: அக். 19: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் தரக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத சூழலில் மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செந்தில் பாலாஜி கூறினார்.
இதனிடையே அக்டோபர் 10 ஆம் தேதி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் அவர் சிறைக்கு சென்ற நிலையில், சிறையில் இருந்தபடியே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் தர வேண்டும் என மனுவில் கோரி உள்ளார். அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம், திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மறுநாளே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்
அதேநேரம் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார் எனக் கூறி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை அமலாக்கத் துறைக்கு அளிக்க நீதிபதி அறிவுறுத்தியதுடன், இதுகுறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படியும், மனுவுக்கு பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி வரை 7 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்ந்நிலையில் வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று காலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். அப்போது மருத்துவக் காரணத்தை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். நான்கு மாதங்களை கடந்தும் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.