சென்னா ரெட்டி மகன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

ஐதராபாத், நவ. 23- ஆந்திரா மாநிலத்தில் முதல் மந்திரியாகவும், தமிழகத்தில் கவர்னராகவும் பதவி வகித்தவர் மறைந்த சென்னா ரெட்டி. இவரது மகன் மர்ரி சசிதர் ரெட்டி (67), தெலுங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவராக திகழ்ந்தார். மந்திரி பதவியும் வகித்துள்ளார். இந்நிலையில், மர்ரி சசிதர் ரெட்டி திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.
தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் கார்கேவுக்கு அனுப்பினார். முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான பின்னணியை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். கட்சி விவகாரங்களில் பணம் ஆதிக்கம் செலுத்துகிறது.
மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை வலுவாக எதிர்கொள்ளும் நிலையில் கட்சி இல்லை. கட்சியின் மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள் திறம்பட செயல்படுவதில்லை என அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சசிதர் ரெட்டி விரைவில் பா.ஜ.க.வில் சேர உள்ளார். சசிதர் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகியுள்ளது தெலுங்கானாவில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.