சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 50 நாடுகள் பங்கேற்பு

சென்னை:ஜனவரி. 7 – முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் தொடங்­குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கிவைத்து தலைமை உரை­யாற்­று­கி­றார். முன்னதாக தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­கிறார். மேலும், ஒன்றிய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்று பேசுகி­றார். இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் 2 நாட்­க­ளும் நடத்­தப்­பட உள்­ளன. தொடக்க விழாவை பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ஒளிப­ரப்ப மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்ளது.
தொடர்ந்து, இந்த மாநாட்­டின் 2ம் நாளான நாளை (8ம் தேதி) பல்­வேறு நாடு­க­ளின் தொழில்­நி­று­வ­னங்­கள் தமிழ்­நாடு அர­சு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­திட உள்­ளன. சில புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள், முத­ல்வர் மு.க.ஸ்டாலின் முன்­னி­லை­யில், தமிழ்­நாடு அர­சின் தொழில் வழி­காட்டி மையம் மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இத­னைத்தொடர்ந்து நாளை மாலை 4.30 மணிக்கு உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் முத­ல்வர் மு.க.ஸ்டாலின் நிறை­வுரை ஆற்­று­கி­றார். மாநாட்டில் ‘1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை’ எனும் ஆய்வறிக்கை வெளியிடப்பட உள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் டான்ஃபண்ட் திட்டத்தை துவக்கி வைக்கிறார். செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை இந்த மாநாட்டில் வெளியிடப்படுகிறது. 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது சிங்கப்பூர் நாடு மட்டும் ரூ.31 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.