சென்னையில் பலத்த மழை

சென்னை: அக்.30- சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அடையாறு, மயிலாப்பூர், நந்தனம், தி.நகர், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று முதல் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகிறது.
இந்த பருவமழையினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைக்கும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.