சென்னையில் மோடி ‘ரோடு ஷோ’

சென்னை: ஏப். 10:
தென்சென்னை, மத்திய சென்னை வடசென்னை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் 2 கி.மீ. தூரம் ‘ரோடு ஷோ’ நடத்தி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
அவருக்கு பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்துக்கு தொடர்ந்து 5 முறை வந்த பிரதமர் மோடி, பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், 6-வது முறையாக தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, ‘ரோடு ஷோ’வில் (வாகனப் பேரணி) பங்கேற்பதற்காக கார் மூலம் ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை வழியாக தியாகராய நகரில் உள்ள பனகல் பார்க் பகுதிக்கு வந்தார்.
அங்கு திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த பிரதமர் மோடி, 6.30 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறி ‘ரோடு ஷோ’வை தொடங்கினார்.
வாகனத்தில் பிரதமருடன் தமிழக பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை தொகுதி வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் இருந்தனர். பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரைபாண்டி பஜார் பகுதியில் சுமார் 2 கி.மீ.தூரத்துக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ சென்றார்.
பிரதமரை வரவேற்கும் விதமாகசாலையின் இருபுறமும் ஏராளமானபாஜக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்துகைகூப்பி வணக்கம் தெரிவித்து, கையசைத்து, தாமரை சின்னத்தை காண்பித்தவாறே பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.