சென்னையில் மோடி: 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை:ஜன. 19: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இன்று மாலை கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இதன் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மாலை 4 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு 4.50 மணிக்கு வருகிறார். அங்கிருந்து நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகிறார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.