சென்னை செங்கல்பட்டில் பிரதமர் மோடி -பிஜேபி தொண்டர்கள் குவிந்தனர்

சென்னை மார்ச் 4:
தமிழகத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்து சென்றார். 3-வது முறையாக இரண்டு நாள் பயணமாக கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற மோடி, நிறைவாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுபேசினார். இந்நிலையில், இந்த ஆண்டில் 4-வது முறையாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.
மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு இன்று மதியம் 2.45 மணிக்கு விமானத்தில் பிரதமர் மோடி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.20 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் செல்கிறார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து, பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் செல்கிறார். அங்கு மாலை 5 மணி அளவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். ஜிஎஸ்டி மற்றும் அண்ணா சாலையில் பிரதமரை வரவேற்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முன்னிலைப்படுத்தி ‘மக்கள் காவலன்’ என்ற வாசகத்துடன் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவரொட்டிகளும் அதிக அளவில்வைக்கப்பட்டுள்ளன.
மோடிக்கு சாலையில் வரவேற்பு அளிக்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும், காரில் வரும்போது அவர், மக்களை சந்திக்கவும், அப்போது மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்எம்சிஏ மைதானத்திலும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வருகின்றனர். மாநாட்டுஏற்பாடுகளை பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் ஆகியோர் முன்னின்று கவனித்து வருகின்றனர். விழுப்புரம் பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 144 தடை உத்தரவு: பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 29-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.