சென்னை வெள்ளக்காடு-மக்கள் தத்தளிப்பு

சென்னை:நவ.23-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் விடிய விடிய மழை கொட்டியது. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலையில் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், விடுமுறை விடப்படாததால், மழையில் நனைத்தபடி மாணவர்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனர்.
நேற்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுகளின்படி அம்பத்தூர், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ,பெரம்பூர், அயனாவரம், சென்னைஆட்சியர் அலுவலகம், சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 4 செமீ, எம்ஜிஆர் நகரில் 2 செமீ, ஆலந்தூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா ஒரு செமீ மழை பதிவாகியுள்ளது.வீடுகளை சூழ்ந்த மழைநீர்: காலை நேரத்தில் பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில்குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக தண்டையார்பேட்டை நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. வியாசர்பாடி எம்கேபி நகர் கிளை நூலகத்தில் மழைநீர் தேங்கியதால், நூலகத்துக்குள் யாரும் நுழைய முடியாத நிலை நீடித்தது.மேலும் தண்டையார்பேட்டை இளைய தெரு, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை, ராஜாஅண்ணாமலை சாலை, நுங்கம்பாக்கம் வீரபத்திர தெரு, ஸ்டெர்லிங் சாலை, பிராட்வே பிரகாசம் சாலை, பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் அருகில், புளியந்தோப்பு பகுதியில் அங்காளம்மன் கோயில் தெரு, சிவராவ் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் மற்றும் டிமெல்லோஸ் சாலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய சாலை, பெரம்பூர் அருந்ததி நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.கழிவுநீர் கலப்பால் துர்நாற்றம்: பல இடங்களில் தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சீருடையுடன் பள்ளிகளுக்கு மழைநீரை கடந்து செல்லமுடியாமல் மாணவர்களும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாயினர்.பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ராட்சத மோட்டார்களைக் கொண்டு மழைநீரை வெளியேற்றினர். இப்பணிகளை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.4 மரங்கள் வேரோடு சாயந்தன: நேற்று விடிய, விடிய பெய்த மழையால் நேற்று காலை நிலவரப்படி 57 இடங்களில் அதிக அளவில்மழைநீர் தேங்கியது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, ஓர்இடங்கள் தவிர பிற இடங்களில் மழைநீர் வடிந்தது. மழையால் 4 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. 2 சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவற்றிலிருந்த நீரும் உடனுக்குடன் அகற்றப்பட்டது.மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில், அதில் மாநகர பேருந்து சிக்கிக் கொண்டது. பின்னர் அந்த பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. மழைநீரை வெளியேற்றும் பணியில் மொத்தம் 260 நீர் இறைக்கும் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன.மழைக்காக 162 நிவாரண முகாம்கள் தயாராக உள்ள நிலையில், அவற்றில் யாரையும் தங்க வைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.