சென்னை வெள்ளக்காடு – 2 பேர் உயிரிழப்பு

சென்னை: டிச.1- சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் 2 பேர் உயிரிழந்தனர். முதல்வர், அமைச்சர்கள், மேயர், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் மாநகரின் பல்வேறு இடங்களில் பணிகளை ஆய்வு செய்தனர்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப்பகுதி காரணமாக புதன்கிழமைஇரவு வரை சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால் மாநகரில் 192 இடங்களில்மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரைவடிக்கும் பணிகளில் பணியாளர்கள் 23 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா,மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் புதன்கிழமை இரவு முதல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, மழைநீரை வடியச் செய்யும்பணிகளைத் துரிதப்படுத்தினர். மழைநீர்அதிக அளவில் தேங்கிய மேற்கு மாம்பலம் பகுதியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார். அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்.
2 பேர் உயிரிழப்பு: சென்னை புது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (23), நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாகக் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். தியாகராயநகர் வாணி மஹால் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மின்விளக்கு கம்பத்தின் அருகே, மின்சாரம் தாக்கி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இசாசுல் (19) உயிரிழந்தார்.சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நேற்று ரிப்பன் மாளிகைக்கு வந்தார். அங்குக் கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தவர்களிடம் அவரே பேசி குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.இதுபற்றி முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவில், “கடந்த 2 வாரங்களுக்கும்மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் தண்ணீர் தேங்காமலிருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்பான புகார்களுக்கு சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்ஸ்-அப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்