செம்மொழி கற்றல், கற்பித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உ.பி. மாணவர்கள்

புதுடெல்லி, டிச. 29- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்துவரும் காசி தமிழ் சங்கமம்-2 நிகழ்ச்சியில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் பங்கேற்றுள்ளது. இதன் சார்பிலான கற்றல், கற்பித்தல் நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்று பரிசுகளைப் பெறுகின்றனர்.உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் கங்கையின் நமோ கரையில் காசி சங்கமம்-2 டிசம்பர் 17ல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் பலவற்றில் ஒன்றாக செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பிலும் நூல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அதன் பதிப்பு நூல்கள் வட மாநிலவாசிகளின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. தமிழின் பக்தி மற்றும் சங்க இலக்கிய நூல்களும்,
திருக்குறள் உள்ளிட்ட பல நூல்களின் இந்தி, உருது பதிப்புகளும் இடம் பெற்றுள்ளன.இந்த அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கற்றல்-கற்பித்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில், மாணவர்களின் ஆர்வத்தை துண்டும் வகையில் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. சங்க கால, இடைக் கால கவிஞர்களான ஔவையார், திருவள்ளுவர், கம்பர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பற்றி எடுத்துச் சொல்லப்படுகின்றன. தமிழ் இலக்கண, இலக்கியங்கள் குறித்த அடிப்படை அறிமுகங்கள், அடிப்படை பேச்சு எழுத்துத் தமிழிற்கான சொற்கள், தொடர்கள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.தொடர்ந்து, அதன் தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பெற்று நினைவுப்பரிசுகள் வழங்கப்பெற்றன. சங்கம நாட்களின் இந்நிகழ்ச்சி வாரணாசியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களுக்கு வினாடி வினாக்களில், ’பாரதியின் பிறந்த ஊர் எது?,
பாரதியின் முழுப் பெயர் என்ன? பாரதி நடத்தி வந்த இதழ் பெயர்களில் ஒன்று? பாரதி என்னும் பெயருக்கான காரணம் என்ன? பாரதி எனப் பட்டம் யாரால் தரப்பட்டது?’ போன்ற பல வினாக்களும் உண்டு.இந்த போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். அரங்கத்தினைப் பார்வையிட வரும் ஆய்வு மாணவர்கள், பிறமொழியாளர்கள், கல்வியாளர்களுக்கு தமிழகத்திற்கும் காசிற்கும் இடையே நிலவும் தமிழ்ப் பண்பாடு, ஆன்மீக உணர்வுகள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக மொழிபெயர்ப்புக் குழுவின் ஓய்வுபெற்ற இந்தி-தமிழ் அறிஞரான எம்.கோவிந்தராஜன் கூறும்போது, ’தமிழ்மொழி, இலக்கண, இலக்கியம் குறித்த புரிதல் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்தி மொழியில் இப்பயிற்றுவித்தல் நிகழ்த்தப்பெறுகின்றது’ எனத் தெரிவித்தார்.