செயற்கை நுண்ணறிவு பயிற்சி

சென்னை: ஜன 12-
நம் நாட்டிலேயே முதல்முறையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘டீல்ஸ்’ எனும் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து தொழில்நுட்பக் கல்வி கற்றலுக்கு துணை நிற்றல் திட்டத்தின் (Technology Education and Learning Support – TEALS) கீழ் 14 அரசுப் பள்ளிகளில் முன்னோட்டமாக நவீன கற்பித்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்தாண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, அந்த திட்டத்தை 100 பள்ளிகளில் விரிவுபடுத்துவதற்கான தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திட்டத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் பேசும்போது, “அரசுப் பள்ளிகள் வளர்ச்சிக்காக காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பல தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்ப மாணவர்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல், பள்ளிகளில் கல்விக்கு வழங்கப்படுவதுபோல் விளையாட்டு, உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.