சைபர் தாக்குதல் நடத்தும் திறன்பெற்றது சீனா – பிபின் ராவத்


புதுடில்லி, ஏப். 8- சீனாவானது இந்தியாவை விட தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது எனவும், இந்தியாவுக்கு எதிராக சைபர் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது எனவும் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறினார்.
விவேகானந்தர் சர்வதேச அறக்கட்டளை சார்பில், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதப்படைகளை வடிவமைப்பது குறித்த கூட்டத்தில் பிபின் ராவத் பேசியதாவது: சீனா எங்கள் மீது இணைய தாக்குதல்களை நடத்தும் திறன்பெற்றது என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் நமது கணினிகளை பெருமளவு சீர்குலைக்கக்கூடும். இதுபோன்ற தாக்குதல்களைச் சமாளிக்க இணைய பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கி வருகிறோம். ஃபயர்வால்கள் போன்ற தடுப்பு வழிமுறைகள் மூலம் சைபர் தாக்குதல்களை நாம் முறியடிக்க முடியும். அவர்களால் ஃபயர்வால்களிலும் ஊடுருவவும் முடியும். அந்த கட்டத்தில் கணினிகளை மீட்க செயல்படும் விதம் பற்றி கவனித்து வருகிறோம்.
சீனாவுடனான இடைவெளியைக் குறைக்க இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அதற்கு மூன்று சேவைகளின் வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதனை செய்தால், அவர்களுடன் மல்லுக்கட்ட முடியும். அது கடற்படை, ராணுவம், விமானப் படை ஆகும். ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றை விட கடற்படை மேம்பட்ட தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. மூன்று சேவைகளில் ராணுவம் மிகப் பெரிய சேவையாக இருப்பதால், அதனை மையப்படுத்தி ஒருங்கிணைப்பு அமையலாம். மேலும் சில மேற்கத்திய நாடுகளுடன் உறவை மேம்படுத்தி, எப்படி சிறந்த ஆதரவை பெற முடியும் என்பதை கவனிக்க வேண்டும்.
பெண்களுக்கு ராணுவ சேவைப் பிரிவு அதிக வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. பெண்களால் சிறப்பாக செய்யப்படும் சில பணிகள் உள்ளன. சைபர், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் ஆண்களை விட பெண் ஊழியர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இவ்வாறு கூறினார்.