சொத்து குவிப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் மனைவிக்கு சிறை தண்டனை உறுதி

சென்னை : நவ 20- அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 1991-96 மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பரமசிவன். இவர் வருமானத்திற்கு அதிகமாக 38 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரமசிவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் நல்லம்மாளுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் சிறப்பு நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது.
2000ல் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது பரமசிவன் 2015ம் ஆண்டு மரணமடைந்தார்.20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கியுள்ள தீர்ப்பில், திமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதிக்கப்பட்ட ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், தண்டனை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆணையிட்டார்.