சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

கொல்கத்தா: ஜன.5- மேற்கு வங்க மாநிலத்தில் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேசன் கடைகளுக்கு தருவதற்காக ஒதுக்கீடு செய்த உணவு தானியத்தில் 30 சதவீதம் முறைகேடாக வெளிச்சந்தைக்கு திருப்பிவிட்டதாக புகார் எழுந்தது. ரைஸ் மில் உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து ரேசன் உணவுதானிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் பெயரில் போலியாக வங்கிக் கணக்கு தொடங்கி முறைகேட்டை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
ரேசன் திட்ட ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறையினர் பல மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, குடிமைப்பொருள் வழங்கல் திட்ட முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திரிணாமுல் காங். நிர்வாகி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில் சோதனை நடத்தியபோது அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சந்தேஷ்காளி பகுதியில் சோதனை நடத்தியபோது திரிணாமுல் காங். நிர்வாகி ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் 200 பேர் திரண்டு வந்து தாக்குதல் நடத்தினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்புக்காக வந்த துணை ராணுவ படை வீரர்களையும் திரிணாமுல் காங்கிரசார் தாக்கினர். அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த வாகனத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே ரேசன் கடை முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்பிரியோ மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.