சோனாலி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைப்பு

புதுடெல்லி, செப்.14 –
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சோனாலி போகட். டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பிரபலமாக இருந்தார். பாஜக மூத்த தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கோவாவுக்கு சோனாலி போகட் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றார்.அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், சோனாலியுடன் வந்த 2 உதவியாளர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் சோனாலிக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்தை அளித்த சிசிடிவி விடியோ பதிவையும் கோவா போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சோனாலி போகட் கொலை வழக்கை கோவா போலீஸார் சிறப்பாக விசாரித்து ஆதாரங்களை சேமித்துள்ளனர். ஆனால், ஹரியாணா மக்கள் மற்றும் சோனாலி சகோதரியின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம்’ என்றார்.ஹரியாணாவைச் சேர்ந்த சர்வ ஜாத்ய காப் மகா பஞ்சாயத்து சார்பில் மாநில மக்கள் வைத்த இந்த கோரிக்கை கடிதம், கோவா அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.