சோனியா ஆஜராக மீண்டும் நோட்டீஸ்

டெல்லி: ஜூன். 11 நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் கடந்த 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடையாததால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவர் விலக்கு கோரியிருந்தார். தற்போது தொற்றில் இருந்து குணமடைந்து வருவதால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதே வழக்கில் வரும் 13ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். முன்னதாக வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவர் விலக்கு கோரியிருந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட் ஜெர்னல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை விலைக்கு வாங்கியது. இதில் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றதாக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.