சோலார் மின்வேலி திட்டம்

உடுமலை: நவ.6-
வேளாண் நிலங்களுக்குள் வன விலங்குகள் ஊடுருவலை தடுக்க வேளாண் பொறியியல் துறை சார்பில் 70 கி.மீ., தொலைவுக்கு சோலார் மின் வேலி அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி, கொழுமம் வனச்சரகங்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 38,000 ஹெக்டேர் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டுப்பன்றிகள், குரங்குகள், மயில்களின் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது.
வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் விரும்பி உண்ணும் பயிர்களை தேர்வு செய்து நடவு செய்வதால், இயற்கையாகவே காட்டுப்பன்றிகள் ஊடுருவல் தொடர்கிறது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு வனத்துறை சார்பில் அதிகபட்ச இழப்பீடும் வழங்கப்படுகிறது. இதேபோல காட்டு யானைகளால் பாதிப்புகள் ஏற்படுவதும் உண்டு. எனவே காட்டுப் பன்றிகள் ஊடுருவல் தான் வன எல்லையில் வசிக்கும் விவசாயிகளின் தலையாய பிரச்சினையாக உள்ளது.