ஜனதா தளம் வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு

பெங்களூரு, மார்ச் 26:
ஹாசன், மண்டியா மற்றும் கோலார் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வை மஜத‌ தலைவர்கள் இன்னும் இறுதி செய்யவில்லை. கட்சியின் ‘கோர் கமிட்டி’ கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்றும், அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
மண்டியா தொகுதியில் மஜத‌ சட்டமன்ற கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமியின் போட்டிக்கான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னபட்டணா சட்டமன்றத் தொகுதியின் மஜத‌ தலைவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் மண்டியா போட்டியை அறிவிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதனால் வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதமாகி வருவதாக மஜத‌ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹாசன் தொகுதியில் பிரஜ்வாலுக்குப் பதிலாக வேறு ஒருவரை நிறுத்த பாஜகவின் ஏ.டி.ராமசாமியும், ப்ரீதம் கவுடாவும் அழுத்தம் கொடுக்கிறார்கள். பாஜக தலைவர்கள் மூலம் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோலார் தொகுதிக்கு முல்பாகிலு எம்எல்ஏ சம்ரித்தி மஞ்சுநாத், முன்னாள் எம்எல்ஏ நிசர்கா நாராயணசாமி, தலைவர் மல்லேஷ்பாபு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.ஜே.பி. நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் குமாரசாமி, செவ்வாய்க்கிழமை காலை அங்குள்ள ‘கோர் கமிட்டி’ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட இறுதி செய்யப்படும். ஹாசன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் எச்.டி.தேவகவுடா பெங்களூரு திரும்பிய பிறகு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.ராமநகரம் மாவட்டம் மற்றும் சென்னப்பட்டணா சட்டப்பேரவைத் தொகுதியின் மஜத‌ தலைவர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய குமாரசாமி, ‘சென்னப்பட்டணா தொகுதி மற்றும் ராமநகரம் மாவட்டத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. எந்த விஷயத்திலும் நான் உங்களுடன் இருப்பேன். ஆனால், கட்சி நலன் கருதி, நல்ல‌ முடிவு எடுக்க வேண்டும்’ என சமாதானப்படுத்த முயன்றார்.