ஜனாதிபதிக்கு ‘திரவுபதி முர்மு’ என பெயர் வைத்தது யார்?: அவரே வெளியிட்ட தகவல்

புவனேஸ்வர், ஜூலை 26- புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பெயரில் உள்ள ‘திரவுபதி’, மகாபாரதத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். இந்த பெயர் அவருக்கு எவ்வாறு வந்தது என்ற தகவலை அவரே ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். ஒடியா மொழி பத்திரிகை ஒன்று அவரை சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கண்டிருந்தது. அப்போதுதான் இதை திரவுபதி முர்மு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது:- எங்கள் சந்தாலி கலாசாரத்தில் பெயர்கள் மறையாது. ஏனெனில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதன் பாட்டியின் பெயரோ, ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாத்தாவின் பெயரோ வைக்கப்படும். அந்த வகையில் எனது சந்தாலி பெயர் ‘புடி’ ஆகும். திரவுபதி என்பது எனது ஆசிரியர் வைத்த பெயர் ஆகும். அதுவும் மற்றொரு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியரால் கிடைத்தது. எனது இயற்பெயரை அவர் விரும்பவில்லை. எனவே எனது பெயரை மாற்றி விட்டார். அதுமட்டுமின்றி எனது பெயர் பலமுறை மாற்றப்பட்டது. ‘துர்பதி’, ‘தோர்ப்தி’ என பல்வேறு விதங்களில் மாற்றப்பட்டது. இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ‘துடு’ என்ற குடும்பப்பெயரைக்கொண்டிருந்த திரவுபதி, வங்கி அதிகாரியான சியாம் சரண் துடுவை மணந்த பிறகு, முர்மு என்ற பெயரை பயன்படுத்த தொடங்கி உள்ளார்.