ஜனாதிபதித் தேர்தல் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி: ஜூன். 18 – இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தன்னால் நிற்க முடியாது என சரத்பவார் மறுத்துவிட்டார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.