
திருவனந்தபுரம், அக். 23- நேற்று சபரிமலைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருமுடி கட்டி 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மூலவர் சிலை புகைப்படத்தை வெளியிட்டது கடும் எதிர்ப்பை பெற்றது. இதை அடுத்து மூலவர் படத்தை நீக்கி உள்ளது ஜனாதிபதி மாளிகை. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இருமுடி கட்டி, 18 புனித படிகளேறி ஐயப்பனை நேரில் தரிசித்தார். இதன்மூலம், சபரிமலையில் தரிசனம் செய்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை தரிசனத்திற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்காக திரவுபதி முர்மு அக்டோபர் 21ஆம் தேதி மாலை டெல்லியில் இருந்து தனியார் விமானத்தில் திருவனந்தபுரம் வந்தார். திரௌபதி முர்மு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த திரவுபதி முர்மு, நேற்று காலை 9.35 மணியளவில் விமானப்படை ஹெலிகாப்டரில் சபரிமலை நோக்கி புறப்பட்டார். நிலக்கல்லில் இறங்கிய அவர், அங்கிருந்து வாகனத்தில் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் வழிபாடு செய்த பின்னர், இருமுடி கட்டும் மரபின்படி வழிபாடு செய்து, பம்பையில் இருந்து ஜீப் மூலம் சந்நிதானம் நோக்கி பயணித்தார்.















