ஜனாதிபதி ஒப்புதல் -பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்

டேராடூன்,மார்ச் 14 உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘பொது சிவில் சட்ட மசோதாவுக்கு’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாட்டில் முதன் முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்திருக்கிறது.
பிப்ரவரி 6ம் தேதி இந்த சட்டத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்திருந்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது சட்டமாக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு பிப்ரவரி 29ம் தேதி அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் இதற்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பொது சிவில் சட்டம், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் ஆகியவை குறித்த வரையறைகளை கொண்டிருக்கிறது. இதுதான் இந்த சட்டத்தின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. அதாவது, உத்தராகண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து சாதி, மதத்தினருக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தாலும் சரி, மாநில அரசு ஊழியராக இருந்தாலும் சரி. ஆனால், பட்டியல் பழங்குடியின மக்கள் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, லிவ்-இன் உறவுகளில் இருப்பவர்கள் அது குறித்து மாவட்டப் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். திருமணமானவர்கள் லிவ்-இன் உறவுகளில் இருக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. 21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் லிவ்-இன் உறவில் இருக்க விரும்பினால் அது குறித்து பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும். இப்படியான பல்வேறு சர்ச்சை அம்சங்கள் இந்த சட்டத்தில் இருப்பதால் பலரும் இதனை எதிர்த்து வருகின்றனர். ஆனால், கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில், “ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம்” என்று வாக்குறுதி கொடுத்துதான் பாஜக ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.