ஜனாதிபதி சென்னை வருகை

முதுமலை காடு, ஆக. 5 பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னைக்கு வருகிறார். முன்னதாக புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் புறப்படும் அவர், கர்நாடகா மாநிலம் மைசூர் விமான நிலையத்திற்கு இன்று (5-ந் தேதி) பிற்பகல் 2.55 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்தில் உள்ள முதுமலை தேசிய வனப்பகுதிக்கு பிற்பகல் 3.35 மணிக்கு செல்கிறார். பிற்பகல் 3.35 மணி முதல் 3.45 மணிவரை ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணிவரை சுற்றிப் பார்க்கிறார். அங்கு யானைப் பாகன்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டுகிறார்.
சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். மேலும், கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதியை வரவேற்கின்றனர்.
அங்கிருந்து ஜனாதிபதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை ராஜ்பவனை அடைகிறார். அங்கு இரவு உணவு அருந்திவிட்டு அங்கேயே தங்குகிறார்.
நாளை இரவிலும் கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை, 7-ந் தேதி) காலை 9.30 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
7-ந் தேதி புதுச்சேரியில் ஜவகர்லால் முதுகலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார்.