ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி, செப். 5-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுதாரர்கள் மற்றும் மத்திய அரசின் இரு தரப்பு வாதங்களையும் 16 நாட்கள் கேட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தது.
மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் மனுதாரர்கள் எதிர்த்து இருந்தனர்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த முக்கிய வழக்கை ஒரு குழுவாக எடுத்து, இரு தரப்பு வாதங்களையும் – 16 நாட்களுக்கு கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மனுதாரர்களில் ஒருவருமான ஹஸ்னைன் மசூதி, “நாங்கள் முன்வைக்கப்பட்ட வாதங்களில் திருப்தி அடைகிறோம். அனைத்துக் கருத்துகளும் உறுதியாக வாதிடப்பட்டுள்ளன” என்றார்.
விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கியது. 16 நாட்களில், உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பிலிருந்தும் இந்த வழக்கில் விரிவான வாதங்கள் மற்றும் விவாதங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.