ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர், அக். 12- காஷ்மீரில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களை இலக்காக கொண்டு அடிக்கடி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று இரவு மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர்களுக்கு சரணடைய வாய்ப்பு அளிக்கப்பட்டது ஆனால் அதை செய்ய மறுத்துவிட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்டின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் அடையாளம் காணப்பட்டது. அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது பதுங்கியுள்ள மேலும் சில பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.